அவசரகால நிதியை சரியாக
உருவாக்கும் கலை..!
BHARATHIDASAN S
சி.பாரதிதாசன் நிதி ஆலோசகர், https://www.wmsplanners.com/
இன்றைய சூழலில், கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை ஒருவருக்கு எப்போது வேண்டுமானாலும் ஏற்படலாம் என்பதே மறுக்க முடியாத உண்மையாக இருக்கிறது. முன்பெல்லாம் கடன் வாங்க வேண்டிய சூழல் பலருக்கும் எப்போதாவதுதான் ஏற்படும். ஆனால், கோவிட் - 19 தொற்று நோய் தாக்கத்துக்குப் பிறகு, அடிக்கடி கடன் வாங்க வேண்டிய கட்டாயம் பலருக்கும் ஏற்படுகிறது. வேலை இழப்பு, வருமானம் குறைந்தது, மருத்துவச் செலவுகள் அதிகரித்திருப்பது எனப் பல காரணங்களால் இந்தச் செலவு அதிகரித்திருக்கிறது. இதன் விளைவு, அவசரகால நிதி (Emergency Fund) என்பது அனைவருக்கும் மிகவும் அவசியம் என்பதை உணர்த்தியிருக்கிறது.

அவசரகால நிதி ஏன் அவசியம் தேவை?
எதிர்பாராத
திடீர் செலவுகள் ஒருவரைக் கடன் சுமையில் தள்ளாமல் இருக்கவும், நீண்ட நாள்
சேமிப்பு (வங்கி ஃபிக்ஸட் டெபாசிட், தங்கம்) மற்றும் முதலீடு (மியூச்சுவல்
ஃபண்ட், பங்குச் சந்தை, ரியல் எஸ்டேட்) கரையாமல் இருக்கவும், வேலை இழப்பு
ஏற்பட்டால், அடுத்த நல்ல வேலையில் சேரும் வரை குடும்பச் செலவுகளைச்
சமாளிக்கவும் அவசரக் கால நிதியைச் சேர்த்து வைப்பது அவசியமாகும்.
திடீர்
விபத்து மற்றும் உடல்நலப் பாதிப்பின் போது ஏற்படும் மருத்துவச்
செலவுக்குக் காப்பீடு கைகொடுக்கும். இருந்தாலும் அதை நம்பி 100% இருக்க
முடியாது. காரணம், மருத்துவக் காப்பீட்டில் அனைத்து நோய் களுக்கும்,
அனைத்துச் செலவுகளுக்கும் இழப்பீடு கிடைக்காது. வழக்கமான மருத்துவ
பாலிசிகளில் சில நோய்களுக்கான மருத்துவச் செலவுகளுக்கு இழப்பீடு
கிடைக்காது. இதுபோன்ற நேரங்களில் அவசரகால நிதி இருந்தால்தான் நிலைமையை
எளிதாகச் சந்திக்க முடியும்.
அவசரகால நிதி: எவ்வளவு?
பொதுவாக,
குடும்பத்தின் மாதச் செலவு, வீட்டு வாடகை, மின்சாரக் கட்டணம், கடன் தவணை,
வங்கி, தபால் அலுவலக ஆர்.டி, மியூச்சுவல் ஃபண்ட் எஸ்.ஐ.பி முதலீட்டுத் தொகை
ஆகியவற்றின் கூட்டுத் தொகையைப் போல் குறைந்தது 3 - 6 மடங்கு தொகையை
அவசரகால நிதியாக வைத்துக்கொள்ள வேண்டும். குடும்பத்தில் வயதானவர்கள், தீவிர
நோய் பாதிப்பு உள்ளவர்கள் இருந்தால், சற்றுக் கூடுதலாக அவசரகால நிதி
வைத்திருப்பது நல்லது.
அடுத்து, வேலையின் தன்மையைப் பொறுத்தும்
அவசரகால நிதி வைத்திருக்க வேண்டும். திடீரென வேலை இழப்பு ஏற்படக் கூடிய
துறைகளில் பணிபுரிபவர்கள், நிரந்தர வேலையில் இல்லாதவர்கள் கூடுதலாக இந்த
நிதியைச் சேர்த்து வைப்பது நல்லது.
நிதிச் சேவைகள், எஃப்.எம்.சி.ஜி
மார்க் கெட்டிங் போன்ற துறைகளில் பணிபுரிபவர் களுக்கு, மற்ற துறை சார்ந்த
ஊழியர்களைவிட வேலை கிடைப்பது சுலபமாக இருக்கும். அது போன்றவர்கள் 3 முதல் 6
மாதச் செலவு தொகையை அவசர கால நிதியாக வைத்துக் கொண்டால் போதும்.
விமானச்
சேவை, தொலைத்தொடர்பு சேவை, ரியல் எஸ்டேட் போன்ற துறைகளில் பணிபுரிபவர்கள்
சற்றுக் கூடுதலாக அவசர கால நிதி வைத்திருப்பது அவசியமாகும்.
மேலும்,
ஒருவரின் வாழ்க்கை முறை (lifestyle) மேம்படும்போது, அவசரகால செலவுத்
தொகையின் மடங்கை அதிகரித்துக்கொள்வது அவசியமாகும். கொரோனா பாதிப்பு, இந்தத்
தொகையை 12 மடங்கு வரைக்கும் வைத் திருப்பது நல்லது என
உணர்த்தியிருக்கிறது.
அவசரகால நிதிக்கான தொகையை மாதம்தோறும் கொஞ்சம்
கொஞ்சமாக முதலீடு செய்து வரலாம். அல்லது இதர செலவுகளைத் தவிர்த்துவிட்டு,
மொத்தமாகச் சில மாதங்களில் சேர்த்துவிடலாம்.
எந்த முறையில் சேர்ப்பது..?
இந்தத்
தொகையை உடனடியாக, விரைந்து எடுத்து பயன்படுத்தும் விதமாக ஏ.டி.எம் கார்டு
வசதி கொண்ட வங்கிச் சேமிப்புக் கணக்கு, மியூச்சுவல் ஃபண்டில் அதிக பட்சம்
ஒரு நாளில் பணமாக்கக்கூடிய லிக்விட் ஃபண்டு களில் பிரித்து முதலீடு செய்வது
வைக்க வேண்டும். இந்த அவசரகால நிதியை முதலீடு செய்யும்போது, போட்ட
பணத்துக்கு பங்கம் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அடுத்து, வேகமாகப்
பணமாக்கக்கூடியதாக இருக்க வேண்டும். இந்த முதலீட்டின் மூலம் லாபம்
பார்ப்பது என்பதைவிட அவசரகாலச் செலவுக்குப் பயன்படும் விதமாக இருப்பது மிக
முக்கியம் என்பதை அனைவரும் உணர வேண்டும். இதில் எந்த ரிஸ்க்கும் எடுக்கக்
கூடாது.
ஒருமுறை செலவானால், மீண்டும் சேர்க்க வேண்டும்...
அவசரகால
நிதியிலிருந்து, பணத்தை எடுத்துச் செலவு செய்யும்பட்சத்தில், சிறிது
காலத்தில் மீண்டும் அதே அளவில் பணத்தைச் சேர்ப்பது அவசியம். உதாரணமாக,
ஒருவர் அவசரகாலச் செலவுக் கென ரூ.1.5 லட்சம் சேர்த்து வைத்திருக்கிறார்.
அதில் திடீரென ஏற்பட்ட மருத்துவச் செலவுக்கு 20,000 ரூபாயைச்
செலவிடுகிறார். அடுத்துவரும் மாதங்களில் மீண்டும் கொஞ்சம் கொஞ்சமாகப் பணம்
சேர்த்து, அவசரகால நிதியை ரூ.1.5 லட்சமாக உயர்த்துவது அவசியம்.
அப்போதுதான் மீண்டும் ஏதாவது நிதிச் சிக்கல் வந்தால், சிரமம் இல்லாமல்
சமாளிக்க முடியும்.
மியூச்சுவல் ஃபண்டுகளில் வைத்திருக்கலாமா?
குறுகிய காலத்தில் அதிக ரிஸ்க் கொண்ட ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளில் அவசரகாலத் தொகையை வைத்திருக்கக் கூடாது.
அடுத்து,
இந்த அவசரகால நிதியைக் கணவன், மனைவி இணைந்து ஜாயின்ட் வங்கிக் கணக்கில்
வைத்திருப்பது நல்லது. அப்போதுதான் ஒருவருக்கு பிரச்னை ஏற்படும்போது
மற்றவர் சிரமம் இல்லாமல் பணத்தை எடுத்து செலவு செய்ய முடியும்.
அவசரகால நிதி மூலமும் வருமானம்..!
சேமிப்புக்
கணக்கில் குறைந்தபட்ச பராமரிப்புத் தொகைக்கு மேற்படும் தொகை, ஃபிக்ஸட்
டெபாசிட்டுக்குத்தானே மாறிக்கொள்ளும் வசதி கொண்டதில் அவசரகால நிதியைப்
போட்டு வைத்தால், அந்தத் தொகையைப் பயன்படுத்தாத காலத்தில் கூடுதல் வட்டி
கிடைக்கும்.
மூன்று மாதத்துக்கான செலவுத் தொகையை விரைந்து
பணமாக்கும் திட்டங்களில் முதலீடு செய்து வைத்திருக்கும் அதே நேரத்தில்,
அதற்கு மேற்பட்ட காலத்துக்கான தொகை இருக்கும்பட்சத்தில் அதை ஓரிரு
நாள்களில் பணமாக்கக்கூடிய ஃபிக்ஸட் டெபாசிட், குறுகிய கால கடன் ஃபண்டுகள்,
கன்சர்வேடிவ் ஹைபிரிட் ஃபண்டுகளில் முதலீடு செய்து வைக்கலாம்!
SRC: https://www.vikatan.com/business/finance/guidance-for-emergency-fund